நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது; உபரிநீர் வெளியேற்றம் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை  குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது; உபரிநீர் வெளியேற்றம்  கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு்ள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடிவாரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. இதன் உயரம் 42 அடியாகும். இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைகிறது.

இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

நிரம்பியது

இந்த நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 39 அடியாக இருந்தது.

இந்த நிலையில் அன்று மாலை வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக இரவு அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

நேற்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணைக்கு 1,759 கனஅடி தண்ணீர் வந்தது. உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரங்களில் உள்ள குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வினோபாநகர், வாணிப்புத்தூர், இந்திராநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி உள்ள கிராம மக்கள் ஆபத்தை உணராமல் அணையில் இருந்து வெளியேறும் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து வருகின்றனர்.

ஆபத்தை உணராமல்...

பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டு கொள்ளாமல் மீன் பிடிக்கின்றனர். அணையில் இருந்து பெரிய அளவிலான காய்ந்த மரங்கள் காட்டாற்றில் அடித்து வரப்படும் நிலையில் மீன் பிடிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் அணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறும் காலங்களில் மீன் பிடிப்பதை பொதுப்பணித்துறையினர் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story