பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்
பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் அபாய அளவைக் கடந்தது. இதனால், பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த 6-ந் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து நேற்று உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இதனால் கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி உபரிநீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. பாசனக்கால்வாய் வழியாக வினாடிக்கு 281 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.