ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மேட்டூர்:-
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவு வாயில் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சில ஒப்பந்த தொழிலாளர்கள் அனல் மின் நிலையத்துக்கு வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு சென்றபின் போராட்டம் நடப்பதை அறிந்தவுடன் அங்குள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்டுக்காக அமைக்கப்பட்ட கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள்.
தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கோபுரத்தின் மீது இருந்து இறங்கினார்கள். தொடர்ந்து அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். இதனால் அனல் மின் நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.