ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம்
மேட்டூர்:-
மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும் இயங்கி வருகிறது. புதிய அனல்மின் நிலையத்தில் சுமார் 400 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். புதிய அனல் மின் நிலையத்திற்கு சரக்கு ெரயில் மூலம் எடுத்துவரப்பட்ட நிலக்கரியும் இறக்கப்படாமல் அப்படியே இருந்தது. தகவல் அறிந்து கருமலைக்கூடல் போலீசார், ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து மாலை சுமார் 3 மணிக்கு மேல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.