ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேலூரில் பணியின்போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த தொழிலாளியின் மருத்துவ செலவை ஏற்கக்கோரி ஒப்பந்த மின்ஊழியர்கள் சேண்பாக்கம் துணை மின்நிலையத்தில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த ஊழியர் படுகாயம்
காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). இவர் வேலூர் தோட்டப்பாளையம் மின்வாரிய பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அஜித்குமார் கடந்த 23-ந் தேதி வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கை அகற்றப்பட்டது. பணியின்போது பாதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு மின்சார வாரியம் சார்பில் நிவாரணம் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், அஜித்குமாரின் மருத்துவ செலவை மின்சார வாரியம் ஏற்கக்கோரியும், அவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும் ஒப்பந்த மின்ஊழியர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சேண்பாக்கம் துணை மின்நிலையத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
ஒப்பந்த ஊழியரான அஜித்குமாரை விதியை மீறி மின்கம்பத்தில் ஏற்றி பணியில் ஈடுபடுத்திய மின்வாரிய அலுவலரை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த மின்ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
அப்போது வேலூர் வடக்கு போலீசார், இங்கு கோஷங்கள் எழுப்பக்கூடாது. மின்வாரிய அதிகாரியிடம் மனு கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறினர். இதற்கு ஒப்பந்த மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் கோட்ட மின்வாரிய பொறியாளர் (பொறுப்பு) பரிமளா மற்றும் போலீசார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அஜித்குமாரின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாகவும், அவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொறியாளர் பரிமளா உறுதியளித்தார். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.