அடிபம்பை அகற்றாமல் கால்வாய் தடுப்புச்சுவர் அமைத்த காண்டிராக்டர் கைது


அடிபம்பை அகற்றாமல் கால்வாய் தடுப்புச்சுவர் அமைத்த காண்டிராக்டர் கைது
x

வேலூரில் அடிபம்பை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் அமைத்த காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூரில் அடிபம்பை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் அமைத்த காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை, மழைநீர், கழிவுநீர் கால்வாய், வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு, பூங்காக்கள், கோட்டையை அழகுப்படுத்துதல், ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 52 வகையான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வேலூர் பேரி காளியம்மன் கோவில் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது கடையின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சாலை போடப்பட்டது. அடுத்த சில நாட்களில் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவோரம் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை அகற்றாமல் தார்சாலை அமைக்கப்பட்டது.

இந்த சம்பவங்களால் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காண்டிராக்டர்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அடிபம்பை அகற்றாமல் தடுப்புச்சுவர்

இதையடுத்து வேலூர் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மேற்கொள்ளும் அனைத்து காண்டிராக்டர்களையும் அழைத்து ஆலோசனைகள் வழங்கியது. அப்போது பணிகளை எவ்வித குறைபாடுகளும் இன்றி விரைந்து செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்துவாச்சாரி விஜயராகபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த அடிபம்பை அகற்றாமல் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதுதொடர்பான செய்தி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் வெளியானது. மேலும் அடிபம்புடன் சேர்த்து கால்வாய் தடுப்புச்சுவர் அமைத்த புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த அடிபம்பு அகற்றப்பட்டது.

காண்டிராக்டர் கைது

அதைத்தொடர்ந்து இந்த பணியை மேற்கொண்ட வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்த காண்டிராக்டர் குட்டி என்ற சுரேந்திரபாபுவின் (வயது 49) ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த பணியை சரியாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் (பொறுப்பு) சத்துவாச்சாரி போலீசில் காண்டிராக்டர் சுரேந்திரபாபு மீது புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல், நீர்நிலை ஆதாரத்தை சேதப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சுரேந்திரபாபுவை கைது செய்தார். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story