நெற்பயிரில் பரவும் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்


நெற்பயிரில் பரவும் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:41 PM GMT (Updated: 22 Nov 2022 6:42 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிரில் பரவும் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிரில் பரவும் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பனிப்பொழிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது இரவில் வெப்பநிலை குறைவாகவும் பனி பொழிவும் இருப்பதினால் நெற்பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.நெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படுவதால் விவசாயிகள் இதனை மஞ்சள் நோய் என தவறாகக் கருதுகின்றனர்.

பாக்டீரியா தாக்குதல்

மஞ்சள் நோய் போன்று இல்லாமல் பாக்டீரியா தாக்கிய பயிரில் இலையின் நுனிப் பகுதியிலிருந்து துவங்கி மஞ்சள் நிற பட்டை வடிவ கோடு இலையின் அடிவரை பரவத் தொடங்குகிறது. இதில் காலை நேரத்தில் இலையில் உள்ள மஞ்சள் நிற திட்டுகளில் பாக்டீரியாவின் திரவம் வடிவதைக் காண முடியும். நோயின் பாதிப்பு அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.தற்போது பனிப்பொழிவு, காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால், தாக்குதல் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருந்து தெளித்தல் வேண்டும்.

கட்டுப்பாடு முறைகள்

ஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை மருந்து 120 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லதுகாப்பர் ஹைட்ராக்சைடு 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் இயற்கை நோய் விரட்டியான பசுஞ்சாண கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் பயிர் நன்கு நோயிலிருந்து விடுபட்ட பின்னரே தழைச் சத்தினை இடவேண்டும்மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story