பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: சிறப்பு கோர்ட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: சிறப்பு கோர்ட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர் வழக்கு விசாரணை 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு.
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கையும், இதேபோன்று நெல்லை உள்ளிட்ட கோர்ட்டுகளில் எஸ்.வி.சேகர் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் மற்றும் அவர் மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அய்.கோபால்சாமி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
அப்போது எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.வி.சேகர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இதைத் தொடர்ந்து மனுதாரரிடம், எஸ்.வி.சேகர் தனது பதிவை நீக்கி விட்டதாகவும், மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் சொல்கிறாரே, நீங்கள் வழக்கை தொடர விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்டார்.
அதற்கு மனுதாரர் அய்.கோபால்சாமி வழக்கை தொடர இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைக்காக வழக்கை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.