ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது தகராறு:தி.மு.க.வினர் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு


ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது தகராறு:தி.மு.க.வினர் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
x

ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது ஏற்பட்ட தகராறில் தி.மு.க.வினர் காரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது ஏற்பட்ட தகராறில் தி.மு.க.வினர் காரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகராறு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் ஈரோட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தி.மு.க. சார்பில் ஈரோடு ராஜாஜிபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிா்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு இருந்தாலும், பொருட்களை வாங்கும் ஆர்வத்தில் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால் கூட்டநெரிசல் அதிகமானது. அப்போது பொதுமக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால், தகாத வார்த்தையில் பேசிகொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் ராஜாஜிபுரத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான திருமூர்த்தி (வயது 26) என்பவரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை உருவானது.

கார் சிறைபிடிப்பு

தாக்கப்பட்ட திருமூர்த்தியும், அவரது உறவினர்களும் ஆத்திரம் அடைந்து அங்கு நின்றிருந்த தி.மு.க.வினர் காரை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், "3 பேர் சேர்ந்து எங்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை கைது செய்ய வேண்டும்", என்று கூறினர். அதற்கு போலீசார், "பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உறுதிஅளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறபட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தினால் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story