ஒரு பாலம் கட்ட 2 துறைகள் நிதி ஒதுக்கியதால் சர்ச்சை
கூடலூர்-தேவர்சோலை எல்லையில் ஒரு இடத்தில் பாலம் கட்டுவதற்கு 2 துறைகள் நிதி ஒதுக்கீடு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூர்,
கூடலூர்-தேவர்சோலை எல்லையில் ஒரு இடத்தில் பாலம் கட்டுவதற்கு 2 துறைகள் நிதி ஒதுக்கீடு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நிதி ஒதுக்கீடு
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோழிப்பாலத்தில் இருந்து தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட சேபட்டி பகுதிக்கு சாலை செல்கிறது. இதன் குறுக்கே ஆற்று வாய்க்கால் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர் கனமழையால் வாய்க்கால் மீது கட்டப்பட்ட சிமெண்ட் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் புதிய பாலம் கட்ட வேண்டுமென கோழிப்பாலம், சேபட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், உரிய நிதி ஒதுக்காததால் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கூடலூர் மற்றும் தேவர்சோலை எல்லையில் உள்ள, ஆற்று வாய்க்காலில் 10 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டுவதற்கு கூடலூர் நகராட்சி மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதேபோல் 17 மீட்டர் நீளத்தில் பாலம் கட்ட பொதுப்பணித்துறை (நீர்வளம்) மூலம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கி, தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
சர்ச்சை
இந்த நிலையில் பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணி நேற்று தொடங்கப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை (நீர்வளம்) மற்றும் கூடலூர் நகராட்சி ஆகிய 2 துறைகளும் ஒரு பாலம் கட்ட நிதி ஒதுக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எல்லை பிரச்சினையும் உருவாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தேவர்சோலை பேரூராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கூடலூர் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நில அளவை செய்து எல்லையை வரையறுத்த பிறகு பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பணியும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.