குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு:ராணுவ வீரர் உள்பட 6 பேர் காயம்:12 பேர் மீது வழக்கு
தேனி அருகே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மகன் மோகன்பாபு (வயது 33). ராணுவ வீரர். இவர், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். ராஜாங்கம் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் மோகன்பாபு, அவருடைய மனைவி கயல்விழி, தாய் நாகரத்தினம், தந்தை ராஜாங்கம் ஆகிய 4 பேரும், மற்றொரு தரப்பில் முருகனின் மகன்கள் சதீஷ்குமார் (37), அசோக்குமார் ஆகியோரும் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், முருகன், சதீஷ்குமார், அசோக்குமார், ராஜாங்கம், மோகன்பாபு உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.