வந்தே பாரத் ரெயில் பயணிகளுக்கு வசதியாகமதுரை-போடி ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை
வந்தே பாரத் ரெயில் பயணிகளுக்கு வசதியாக மதுரை-போடி ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பயணிகள் நலச்சங்கச் செயலாளர் பிரம்மநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து (வண்டி எண் 06701) பயணிகள் ரெயில் தினமும் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு போடிநாயக்கனூருக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் போடிநாயக்கனூரில் இருந்து (வண்டி எண் 06702) அந்த ரெயில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில்களை தூத்துக்குடி வரை நீட்டித்து, வந்தே பாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயக்க வேண்டும். இதனால், தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறுவர்.
அதேபோல் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் பயணிகள் நலன் கருதி வந்தே பாரத் நெல்லை-சென்னை ரெயிலில் பயணிக்கும் வகையில் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு அதிகாலையில் ஒரு பயணிகள் ரெயிலும், மறு மார்க்கத்தில் ெநல்லை-திருச்செந்தூர் இடையை இரவு நேர பயணிகள் ரெயிலையும் இயக்க வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.