பெரம்பலூரில் 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றம்-கலெக்டர் தகவல்


பெரம்பலூரில் 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றம்-கலெக்டர் தகவல்
x

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

பெரம்பலூர்

கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம், காரை, சில்லக்குடி, மேத்தால் உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கொளக்காநத்தம் கிராமத்தில் ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

30 ஊராட்சிகள் தேர்வு

சில்லக்குடி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் விவசாயி தேவேந்திரன் தக்காளி பயிரிட்டுள்ளதையும், சில்லக்குடியில் தரிசு நிலத்தை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செப்பனிட்டு விளை நிலமாக மாற்றும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதிஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.22.26 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் பல்வேறு பணிகளின் முக்கியமானது தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும் பணியாகும்.

விளை நிலங்களாக மாற்றம்

அதனடிப்படையில், ஆலத்தூர் வட்டாரத்தில் 2021-22-ம் ஆண்டில் 2 தரிசு நிலத்தொகுப்புகள் 38.27 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டு இதுவரை 10 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் 2022-23-ம் ஆண்டிற்கு 2 தரிசு நிலத்தொகுப்புகள் 31.19 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டு இதுவரை 10.5 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்களில் வரகு மற்றும் உளுந்து போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story