கோவில்களை வணிகத்தலமாக மாற்றுவதை ஏற்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை


கோவில்களை வணிகத்தலமாக மாற்றுவதை ஏற்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டுமே இருக்க வேண்டும், வணிகத்தலங்களாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.

மதுரை

கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டுமே இருக்க வேண்டும், வணிகத்தலங்களாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.

தனியார் இணையதள மோசடி

ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோவில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் பிரபலமான கோவில்களுக்கான இணையதளம் மூலமாக நன்கொடை அளிப்பதுடன், சிறப்பு பூஜைகளுக்கு முன்பதிவும் செய்கின்றனர்.

ஆனால் தற்போது தனிநபர்கள் கோவில் இணையதளத்திற்கு பதிலாக தங்களின் இணையதளங்களில் பக்தர்களை வரவேற்று, லட்சக்கணக்கான ரூபாயை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இதனால் வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு அதிருப்தி நடவடிக்கைள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், மடங்களின் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அவற்றை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

வருவாய் இழப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல் கார்த்திகேயன், ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரெங்கம், பழனி உள்ளிட்ட முக்கிய தலங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு பதிலாக தனியார் இணையதளங்களை பக்தர்கள் பயன்படுத்தும்படி செய்து, பல லட்ச ரூபாயை மோசடி செய்கின்றனர். இதை தீவிரமானதாக கருதி உடனடியாக தடுக்க வேண்டும் என்றனர்.

அரசு தரப்பில், கோவில் பெயரில் செயல்பட்ட தனியார் இணையதள முகவரி முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

வணிகத்தலமாக மாற்றுவதா?

பின்னர் கோவில்கள் வழிபாட்டுத்தலங்களாக மட்டுமே இருக்க வேண்டும். வணிகத்தலங்களாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், இந்த வழக்கில் தமிழக சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக இணைக்கிறோம்.

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் தனியார் இணையதள மோசடியை தடுக்கக்கோரி மார்கண்டன் என்பவர் தாக்கல் செய்த வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story