உடல் நலக்குறைவால் தண்டனை கைதி சாவு
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் போக்சோ வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தண்டனை கைதி
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த 2021-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வள்ளிப்பட்டு அருகே உள்ள நந்தகாயம் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ஆசைதம்பி (வயது 33) என்பவர் போக்சோ வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஆசைதம்பிக்கு போக்சோ வழக்கில் 16 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் ஆசைதம்பிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் சரிந்து கீழே விழுந்த அவரை சக கைதிகள், ஜெயில் காவலர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆசைதம்பிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
உடல் நலக்குறைவால் சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி ஆசைதம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆசைதம்பி உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.