மாணவர்கள் தாய் மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு


மாணவர்கள் தாய் மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும்  அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
x

மாணவர்கள் தாய் மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

கடலூர்


புவனகிரி


சிதம்பரம் அருகே சி. முட்லூரில் உள்ள அரசு கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார்.

சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், புவனகிரி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்.

810 பேருக்கு பட்டம்

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 810 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

புதிய கல்வி திட்டம்

இரு மொழி கொள்கையை திராவிட மாடல்தான் கொண்டு வந்துள்ளது. ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம் ஆகும். நாம் தாய் மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவார்.

தமிழகத்தில் 31 புதிய கல்லூரிகளை தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நமது மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக புதிய கல்வித் திட்டம், பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்கும் போது மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பல நன்மைகள் செய்வார்

இதுபோன்று இன்னும் மாணவர்களுக்கு பல நன்மைகளை முதல்-அமைச்சர் செய்வார். எனவே நீங்கள் உயர்கல்வி படித்து முடித்து சமுதாயத்தை பற்றியும், சமுதாயத்தின் அக்கறையை பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளைரவீந்திரன், ஒன்றியக் குழு தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டனர். .முடிவில் துணை முதல்வர் மீனா நன்றி கூறினார்.


Next Story