காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாத நிலை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால் அந்த காலக்கட்டத்தில் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால் அந்த காலக்கட்டத்தில் படித்த மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பட்டமளிப்பு விழா
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 49 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் 32-க்கும் மேற்பட்ட துறைகளில் நேரடியாகவும், தொலைநிலை கல்வி மூலமும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது. இதில் இணைப்பு கல்லூரிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், பல்கலை துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், தொலை நிலை கல்வி மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர். கல்லூரிகளில் படித்து முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது வழக்கம்.
இந்த விழாவிற்கு தமிழக கவர்னர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்குவார். மேலும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆய்வு மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் பெறுவார்கள். பின்னர் ரெக்கார்ட்ஸ் ஆப் டிகிரி என்ற புத்தகத்தில் கவர்னர் கையெழுத்திடுவார். அதன் பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பட்டம் பெற ஒப்புதல் வழங்கப்படும். ஆனால் கடந்த 2019-20, 2020-21, 2021-22 ஆகிய 3 கல்வியாண்டுகளில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணம் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு
இதன் காரணமாக அந்த கல்வியாண்டில் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் வேலை சம்பந்தமாக வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாமலும், உள்நாடுகளிலும் வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் போது பட்டப்படிப்பு பெற்ற சான்றிதழை அவர்கள் கொடுக்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் பட்டம் முடித்துகவர்னர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்று அதில் பட்டம் பெற்றவர்கள் பல்வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித வேலைவாய்ப்பிற்கும் செல்ல முடியாமல் உள்ளோம். மேலும் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதற்கு பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த விஷயத்தில் தமிழக அரசும், கவர்னரும் தலையிட்டு உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றனர்.