அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22-ம் தேதி பட்டமளிப்பு விழா-கவர்னர், மத்திய மந்திரி பங்கேற்பு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ம் தேதி காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி கூறியதாவது:- தமிழக கவர்னரும், அழகப்பா பல்கலைக்கழக வேந்தருமாகிய ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சருமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், அழகப்பா பல்கலைக்கழக இணை வேந்தருமாகிய பொன்முடி விழாவில் பங்கேற்கிறார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி வரவேற்கிறார். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 5 ஆயிரத்து 34 மாணவர்களுக்கும், இணைப்பு கல்லூரியில் பயின்ற 47ஆயிரத்து 198 மாணவர்களுக்கும், இணைவுக்கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற 8 ஆயிரத்து 706 மாணவர்களுக்கும், தொடர்நிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 48 ஆயிரத்து 26 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஆயிரத்து 124 மாணவர்களுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.