ஆரணி ஓட்டலில் உணவுடன் பரிமாறிய அவரைக்காய் சாம்பாரில் நெளிந்த புழு
ஆரணி அருகே ஓட்டலில் வாடிக்கையாளருக்கு பரிமாறிய சாம்பார் சாதத்தில் புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஓட்டலில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி அருகே ஓட்டலில் வாடிக்கையாளருக்கு பரிமாறிய சாம்பார் சாதத்தில் புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஓட்டலில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சைவ ஓட்டல்
ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு சைவ ஓட்டலில் நேற்று முன்தினம் பகலில் ஆரணி அருந்ததி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் உமேஷ் (வயது 29) என்பவர் மதிய உணவு சாப்பிட்டு உள்ளார்.
உணவில் அவரைக்காய் சாம்பார் பரிமாறியபோது புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உமேஷ், உணவு பரிமாறிய சர்வரிடம் கேட்டபோது, புழுதானே என அலட்சியமாக அவர் பதில் கூறினாராம்.
அப்போது ஓட்டலில், உரிமையாளரும் இல்லை. இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் உமேஷ் புகார் செய்தார். அது குறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
அதிரடி ஆய்வு
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்த ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்பேரில் நேற்று ஓட்டலில் சமையல் கூடம், உணவு பரிமாறும் இடங்களில் ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்பவு மேற்கொண்டார். அப்போது அவர் வாடிக்கையாளரிடம் கனிவாக பேச வேண்டும், காய்கறிகளில் புழு இருந்திருக்கலாம். அதை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி காய்கறிகளை பதப்படுத்தி உணவு சமைத்து பரிமாறுங்கள். புழுதானே என்றெல்லாம் வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேச கூடாது என ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளரை எச்சரித்தார்.
தொடரும் பரபரப்பு
ஆரணி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் ஏற்பட்ட கோளாறால் அங்கு சாப்பிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒரு சிறுமி பலியானாள். மற்றொரு அசைவ ஓட்டலில் தேர்வு முடிந்து மாணவர்கள் சாப்பிட்டதில் அங்கும் இது போன்ற கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் எதிரொலியாக 2 அசைவ ஓட்டல்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்பின் ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் எலி தலை இருந்ததாக புகார் வந்ததையடுத்து அந்த ஓட்டலும் மூடப்பட்டது. இப்போது 4-வதாக நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.