உண்டியலில் பணம் திருடிய சமையல் தொழிலாளி கைது


உண்டியலில் பணம் திருடிய சமையல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 9 Dec 2022 12:30 AM IST (Updated: 9 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருடிய சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக பழனி முருகன் கோவில் நுழைவுவாயில், உட்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் கோவில் பகுதியில் பணியாளர்கள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைக்கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் வெளியேறும் பகுதியில் உண்டியல் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த உண்டியலில் பக்தர் ஒருவர் செலுத்திய காணிக்கை பணம் உள்ளே விழாமல் மேற்பகுதியில் நின்றது. அந்த பணத்தை உண்டியல் அருகே நின்ற நபர் திருடினார். இதைக்கண்டதும் கோவில் பணியாளர்கள் அவரை கையும்களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், தென்காசியை சேர்ந்த சமையல் தொழிலாளி சுந்தர் (வயது 40) என்று தெரியவந்தது. மேலும் அவர், உண்டியலில் திருடிய ரூ.340-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். பின்பு அவர், பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பழனி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story