மலேசியாவில் தவித்த குன்னூர் பெண் மீட்பு
மலேசியாவில் தவித்த குன்னூர் பெண் மீட்பு
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் மோகனபாண்டியன். இவரது மனைவி சிவகாமி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உண்டு. கடந்த 6 மாதத்திற்கு முன்பு 3 குழந்தைகளையும் தனது பெற்றோரான முரளி, தேவி ஆகியோரிடம் விட்டு விட்டு திருவாரூரிலுள்ள தனியார் ஏஜென்ட் மூலம் வேலைக்காக மலேசியா சென்றார். அங்கு சிவகாமிக்கு ஓரு வீட்டில் பணி கொடுக்கப்பட்டது. அங்கு வேலைப் பளு அதிகமாக இருந்ததோடு சரியான முறையில் உணவு மற்றும் இருப்பிடம் கொடுக்காமல் கொடுமைபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்துஅங்குள்ள புதுக்ேகாட்டையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கூறினார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டையை சேர்ந்த பெண் தொலைகாட்சிக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிவகாமி தன்னைதமிழகம் செல்ல உதவுமாறு தொலைக்காட்சியில் கடந்த 19.12.2022 அன்று வெளியான செய்தியில் கூறினார். இதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் சிவகாமியை தமிழகம் அழைத்து வர முயற்சி எடுத்தது. மேலும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமசந்திரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொண்டு சிவகாமி மீட்கப்பட்டார். அவர் கடந்த 13-ந் தேதி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் அறிவுரையின் பேரில் குன்னூர் வருவாய் துறையினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து ஈரோடு சென்று அங்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர்க ராமச்சந்திரனை நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்தார்.