போதை இல்லாத மாவட்டமாக குமரியை மாற்ற ஒத்துழைக்க வேண்டும்


போதை இல்லாத மாவட்டமாக குமரியை மாற்ற ஒத்துழைக்க வேண்டும்
x

குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீஸ்துறையின் சார்பில் போதை பொருட்கள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர்போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை வாசிக்க, அதிகாரிகள், கல்லூரி மாணவ- மாணவிகள், ஆசிரிய- ஆசிரியைகள், நிர்வாகிகள் திரும்பக்கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசும்போது கூறியதாவது:-

குழுக்கள் அமைப்பு

குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (வருவாய்த்துறை, போலீஸ்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட) சுமார் 11-க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி போதை பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உட்கொள்பவர்களை கண்டறிந்து அவர்கள் அப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, போதைப்பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களை கொண்டு போதைப்பொருட்கள் உட்கொள்வதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

அதுபோன்று தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய நிகழ்ச்சியில் வருகை தந்துள்ள மாணவ- மாணவிகள் தங்களுடைய சக நண்பர்கள், வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருப்பின் அவர்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்து அப்பழக்கத்திலிருந்து அவர்கள் விடுபட வழிவகை செய்வதோடு, போதைப்பொருள் விற்பவர்கள் மற்றும் அதற்கு அடிமையானவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 7010363173 என்ற கட்டணமில்லா செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும். நமது மாவட்டத்தை இளைஞர்கள் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதை இல்லாத குமரி மாவட்டமாக மாற்றிட ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகள் கலந்து கொண்ட போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் நடராஜன், இயக்குனர் அருள்சன் டேனியல், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், ஏ.எம்.கே. மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story