பிளாஸ்டிக் இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்


பிளாஸ்டிக் இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்
x

குமரியை பிளாஸ்டிக் இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியை பிளாஸ்டிக் இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பயன்பாடு

பல்வேறு இயற்கை வளங்களை கொண்டிருக்கிற மாவட்டம் நமது குமரி மாவட்டமாகும். முதல்-அமைச்சரின் அறிவிப்புபடி குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

ஒத்துழைப்பு வேண்டும்

பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகள், கூடைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தை நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பது, சேமித்து வைப்பது, வினியோகிப்பது, விற்பது, உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையினை குமரி மாவட்டத்தில் அமல்படுத்தி மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு பணிக்குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி (தேசிய நெடுஞ்சாலை) ரேவதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story