நில மோசடி வழக்கில் கூட்டுறவு சார்பதிவாளர்-தணிக்கையாளர் கைது


நெல்லையில் நில மோசடி வழக்கில் கூட்டுறவு சார்பதிவாளர், தணிக்கையாளர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் நில மோசடி வழக்கில் கூட்டுறவு சார்பதிவாளர், தணிக்கையாளர் கைது செய்யப்பட்டனர்.

நில மோசடி

நெல்லை பாரத ஸ்டேட் வங்கி பணியாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் 31-8-2019 முதல் 7-2-2021 வரை கூட்டுறவு சார்பதிவாளராக பணிபுரிந்து வந்தவர் வே.மசூது (வயது 60). இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் கூட்டுறவு துறையில் தணிக்கையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆறுமுகநயினார் என்ற பாஸ்கர் (62).

இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து மேலப்பாளையம் பகுதியில் உள்ள சங்கத்திற்குரிய இடத்தை முறைகேடாக ஆறுமுகநயினாருக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அதாவது ஆறுமுகநயினாரை சங்க உறுப்பினராக சேர்க்க மற்றும் போலிமனை இடஒதுக்கீடு ஆணை வழங்கும் பொருட்டு, கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தி கையெழுத்தை போலியாக பயன்படுத்தியும், வீட்டு வசதி துணைப்பதிவாளர் அலுவலக போலி முத்திரைகளை பயன்படுத்தியும் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சங்கத்துக்கு ரூ.1 கோடியே 46 லட்சம் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதுகுறித்து வீட்டு வசதி கூட்டுறவு துணைப்பதிவாளர் மீனா குமாரி விசாரணை நடத்தி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கூட்டுறவு துணைப்பதிவாளர் அர்த்தனாரீஸ்வரன் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பவளச்செல்வி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டதாக மசூது, ஆறுமுகநயினார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் நெல்லை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story