ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகவில்லை -வைத்திலிங்கம் பேட்டி
கூட்டு தலைமை வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என தஞ்சையில் வைத்திலிங்கம் கூறினார்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் தஞ்சை சென்றார். பட்டாசு வெடித்து அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என சி.வி.சண்முகம் கூறியுள்ளாரே?
பதில்:- காலாவதியாகவில்லை. ஓ.பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர்.
செல்லுபடியாகாது
கேள்வி:- எல்லா பதவியும் போய்விட்டது என சொல்லப்படுகிறதே?
பதில்:- சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். 23 தீர்மானங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டு சொன்னது. மற்றவை குறித்து விவாதிக்கலாம். ஆனால் தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது என சொல்லி உள்ளது. அதை மீறி அவர்கள் செயல்பட்டனர். இதனால் அவர்கள் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகாது.
கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று இருப்பது சின்னத்தை முடக்குவதற்காக என கூறப்படுகிறதே?.
பதில்:- ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டணி கட்சி சார்பில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லவில்லை.
ஒற்றுமை
கேள்வி:- கட்சி இரண்டாக பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் தரப்பு நம்பிக்கை. மீண்டும் ஜெயலலிதா ஆசைப்படி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். கட்சியில் ஒற்றுமை வேண்டும். கூட்டு தலைமை வேண்டும் என்பதே எங்களது நோக்கம்..
கேள்வி:- சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதா?
பதில்:- எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரத்தில் மற்றவர்களை ஒப்பிட்டு பேச வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 நாளில் முடிவு
முன்னதாக அவருக்கு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், "கோர்ட்டு உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வேறு எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது. நிறைவேற்றி இருந்தால் செல்லாது. அது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். ஜூலை 11-ந் தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை சட்டப்படி நடத்த முடியாது" என்றார்.
இதேபோல் அரியலூர் புறவழிச்சாலையில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்தல் ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் சந்திக்கும் சூழ்நிலை தற்போதைக்கு இல்லை. 3 நாட்களில் கட்சியை எப்படி வழிநடத்திச்செல்வது என்று ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கட்சி பிரச்சினைகளில் ஏற்கனவே நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிட்டுள்ளது. எனவே அவை தலையிட முடியாது என்று சொல்ல முடியாது" என்றார்.