உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள நெல் சேமிப்பு குடோன் மற்றும் வல்லத்தில் உள்ள அரிசி அரவை ஆலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.காமினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர், ஜூலை.5-
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள நெல் சேமிப்பு குடோன் மற்றும் வல்லத்தில் உள்ள அரிசி அரவை ஆலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.காமினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கொள்முதல் நிலையங்கள்
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.மேலும் நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடம் எந்தவித முறைகேடும் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. காமினி நேற்று தஞ்சை வந்தரார்.
ஐ.ஜி. திடீர் ஆய்வு
அவர் தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசி அரவை ஆலைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து அரவைக்கு அனுப்பப்படும் நெல் முறையாக அரவை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறதா? என ஐ.ஜி.காமினி ஆய்வு செய்தார்.தொடர்ந்து தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது நெல் மூட்டைகள் உரிய முறையில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக இயக்கம் செய்யப்படுகிறதா? என பதிவேடுகளை பார்வையிட்டதோடு, அங்கிருந்த ஊழியர்களிடமும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.