போலீஸ் -தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் -தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கும்பகோணம், பிப்.23-
கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழா மகேந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கும்பகோணத்தில் இரவு நேரத்தில் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இரவு 11.30 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கூறியதாவது:-வியாபாரிகளின் நியாயமான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தீர்வு காணப்படும். இரவு நேரத்தில் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் தான் கடந்த சில நாட்களாக கும்பகோணம் மாநகர பகுதியில் குற்றங்கள் குறைந்துள்ளது. குடந்தை மாநகரத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதால் தான் நேரத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இருப்பினும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, இரவு 11.30 மணிக்குள்அனைத்து கடைகளையும் கட்டாயம் மூட வேண்டும். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட கடைகள் இயங்க அவகாசம் எடுத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.