வாலிபரை கண்டித்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
வலங்கைமான் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வலங்கைமான்,
வலங்கைமான் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மது போதை
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் வலங்கைமான், அரித்துவாரமங்கலம் ஆகிய 2 போலீஸ் நிலையங்கள் உள்ளன.நேற்று மாலை அரித்துவாரமங்கலம் கடைத்தெரு பகுதியில் வாலிபர் ஒருவர், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கத்திக்குத்து
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் மணிகண்டன் (வயது28) கடைத்தெரு பகுதிக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் போலீஸ்காரா் மணிகண்டனை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைவீச்சு
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனை கத்தியால் குத்தியவர் அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள மேலகாலனி தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சூர்யா (24) என தெரியவந்தது. அவர் மீது அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். போலீஸ்காரர் ஒருவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.