2 ஆயிரம் ஆண்டு பழமையான சூதுபவளத்தால் ஆன மணி கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான முற்பட்ட சூதுபவளத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான முற்பட்ட சூதுபவளத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டது.
புதிய கற்கால கற்கருவிகள்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப்படிப்பு மாணவர்கள், பேராசிரியர் ரவி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மயிலாடும்பாறையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சூதுபவளத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டது
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன் ஆகியோர் கூறியதாவது:-
முதல் நாளில் புதிய கற்கால கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் இடமான வரட்டனப்பள்ளி எர்ரகெட்ட என்ற இடத்திலும், நரசிம்மசாமி கோவில் பின்புறமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 அரியவகை புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சூதுபவளத்தால் ஆன மணி
பின்னர் தமிழக தொல்லியல்துறை அகழாய்வு செய்த மயிலாடும்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூதுபவளத்தால் ஆன மணி ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மல்லசந்திரம் கல்திடைகளை மாணவர்கள் ஆய்வு செய்து அவற்றின் கட்டுமானம் மற்றும் அமைப்புகளை வரைபடம் வரைந்து ஆவணப்படுத்தினர். தொடர்ந்து பீமாண்டப்பள்ளி வல்வட்டம் மற்றும் குத்துக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது தொல்லியல் ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் மனோகரன், பிரகாஷ், மாணவர்கள் உடனிருந்தனர்.