தஞ்சையில், ஒரு கட்டு மல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை


தஞ்சையில், ஒரு கட்டு மல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை
x

மழை காரணமாக அழுகியதால் விளைச்சல் குறைந்துள்ளதால் தஞ்சையில் ஒரு கட்டு கொத்தமல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாங்கும் திறன் குறைந்தது. இதனால் வியாபாரிகளும் வேதனை அடைந்தனர்.

தஞ்சாவூர்


மழை காரணமாக அழுகியதால் விளைச்சல் குறைந்துள்ளதால் தஞ்சையில் ஒரு கட்டு கொத்தமல்லித்தழை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாங்கும் திறன் குறைந்தது. இதனால் வியாபாரிகளும் வேதனை அடைந்தனர்.

கொத்தமல்லித்தழை

கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும், சீரண சக்தியை எளிதாகவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கொத்தமல்லியில் இலை முதல் தண்டுவரை அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது. சாம்பார், ரசம் போன்ற தமிழர்களின் சமையல்களில் இதன் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது.கொத்தமல்லித்தழை நன்கு பசியை தூண்டுவதால் மக்களும் இதனை உணவுகளில் சேர்க்கின்றனர்.தஞ்சையில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. இதே போல் இந்த பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தஞ்சைக்கு மட்டும் 2 சரக்கு ஆட்டோக்களில் மல்லித்தழை கட்டுகள் வரும்.

மழையால் அழுகின

தற்போது இந்த பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதன் காரணமாக மல்லித்தழை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக அழுகி விட்டது. இதனால் மல்லித்தழை விளைச்சல் குறைந்து விட்டது. இதனால் வெளி மாவட்டங்களுக்கும் பாதிக்கும் குறைவாகவே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தஞ்சைக்கு 2 சரக்கு ஆட்டோக்களில் கொத்தமல்லித்தழை கட்டுகள் வந்த நிலையில் தற்போது ஒரு சரக்கு ஆட்டோவுக்கும் குறைவாகவே வருகின்றன. அழுகியதால் வாங்கும் இடத்திலும் விலை அதிகரித்து விட்டது. இதனால் தஞ்சையில் 1 கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டும் 500 கிராம் முதல் 550 கிராம் எடை வரை இருக்கும்.

வியாபாரிகள் வேதனை

விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் இருந்து வாங்கும் திறனும் குறைந்து விட்டது. கொத்தமல்லித்தழை கட்டு ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்வதால் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து கொத்தமல்லி மொத்த வியாபாரி தேவதாஸ் கூறுகையில், "கடந்த சில நாட்களாக கொத்தமல்லி விளையும் பகுதியில் மழை காரணமாக அழுகி விட்டது. இதனால் கொத்தமல்லித்தழை வரத்து குறைந்து விட்டது. இதனால் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் வாங்குவதில்லை.இதனால் நாங்களும் என்ன செய்வது என்று தெரிய வில்லை. இது அழுகும் தன்மை கொண்டதால் கொள்முதல் செய்ததை ஓரிரு நாட்கள் தான் வைத்திருக்க முடியும். இதனால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். இன்னும் 10 நாட்களுக்குள் நிலை சரியாகி விடும் என எதிர்பார்க்கிறோம்"என்றார்.

காய்கறி விலை

தஞ்சை மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் (கிலோ கணக்கில்) விற்ற விலை விவரம் வருமாறு:-கத்தரிக்காய் ரூ.40, கேரட் ரூ.100, பீன்ஸ் ரூ.90, அவரைக்காய் ரூ.80, சவ்சவ் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.30, முட்டைக்கோஸ் ரூ30, தக்காளி ரூ.35, இஞ்சி ரூ.70, எலுமிச்சை ரூ.100.


Next Story