மக்காச்சோளம் விலைகுறைய வாய்ப்பில்லை
தீவனத்தேவை உள்ளதால் மக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பில்லை என்ற வேளாண் பல்கலைக்கழக முன்னறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோழித்தீவனம்
கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.இதனால் ஆண்டு முழுவதும் இதற்கான தேவை உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது.ஆனாலும் தமிழகத்துக்கான மொத்த மக்காச்சோளத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையே உள்ளது.இதனால் ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் மக்காச்சோளம் தமிழகத்தின் மொத்த தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.சில நேரங்களில் வெளிமாநில வரத்து அதிகரிக்கும் போது உள்ளூரில் மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலையும் ஏற்படுவதுண்டு.
சீரான விலை
தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.தற்போது மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைத்து வருவதால் இறவைப் பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2020-21 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு 25 லட்சத்து 60 ஆயிரம் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் மக்காச்சோளம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.பீகாரிலிருந்து கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய மக்காச்சோள வரத்து இந்த மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கர்நாடக மக்காச்சோளம் வரத்து ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் சூழ்நிலை உள்ளது.இந்தநிலையில் தற்போது உடுமலை பகுதியில் இறவைப் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு தினசரி மக்காச்சோள வரத்து உள்ளது.தற்போது ஒரு குவிண்டால் ரூ 2500 க்கு குறையாமல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விலை முன்னறிவிப்பு
அதேநேரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் அறிவிப்பு விவசாயிகளுக்கு மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.இதுகுறித்து அந்த விலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது'விலை முன்னறிவிப்புத்திட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.ஆய்வுகளின் அடிப்படையில் நல்ல தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது ஜூன் முதல் ஆகஸ்டு வரை குவிண்டாலுக்கு ரூ 2400 முதல் 2500 வரை இருக்கும் என்று கணித்துள்ளது.எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகள் எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலை முன்னறிவிப்பானது தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.