மக்காச்சோள பயிரில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை வழிகாட்டல்
மடத்துக்குளம் பகுதியில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதலைக்கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் வழிகாட்டல்கள் வழங்கி உள்ளனர்.
வயல் ஆய்வு
மடத்துக்குளம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளப் பயிர்கள் தற்போது வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது.இந்த நிலையில் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வயல் ஆய்வு மேற்கொண்டு மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மக்காச்சோள படைப்புழு 6 நிலைகளைக் கொண்டுள்ளது.இளம் பருவப் புழுக்கள் கருப்பு நிற தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. 3-வது பருவத்தில் பழுப்பு நிறத்திலும் ஓரங்களில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
புழுவின் 4 முதல் 6 நிலைகளில் தலை செம்பழுப்பாக மாறுவதுடன், உடலின் ஓரத்தில் மேற்பரப்பில் வெண்ணிற கோடுகள் காணப்படும். 6-ம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிற கோடுகள் காணப்படும்.இந்த கோடுகள் மற்ற படைப்புழுக்களில் இருந்து அமெரிக்கன் படைப்புழுவை வேறுபடுத்திக் காண உதவுகிறது. மேலும் புழுவின் உடம்பில் இறுதிப்பகுதியில் சதுர வடிவில் தோன்றும் வெண்ணிறப் புள்ளிகள் இதனை எளிதில் கண்டறிய உதவும்.புழுக்கள் இலையின் அடியில் சுரண்டி சேதப்படுத்துகிறது.இளம் புழுக்கள் மெல்லிய நூல் இழைகளை உமிழ்நீரால் பின்னி ஒரு செடியில் இருந்து அடுத்த செடிக்கு சென்றடையும்.இளம் பயிர்களில் இலைப் பருவத்திலும், வளர்ந்த பயிரில் கதிர் பிடிக்கும் தருணத்திலும் புழுக்கள் சுரண்டி உண்ண ஆரம்பிக்கும்.குறிப்பாக இரவு நேரத்தில் புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.மேலும் படைப்புழுக்கள் மையக்குருத்தை மென்று தின்று சேதப்படுத்தும்.8 முதல் 14 நாட்கள் வயதுடைய புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை.
கட்டுப்படுத்தும் முறைகள்
தாய் அந்துப் பூச்சி மாலை நேரத்தில் மிகவும் வேகமாக இயங்கும். இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் பயன்படுத்தி ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.கடைசி உழவின் போது 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். அசாடிராக்டின் 2 சதவீத வேப்பெண்ணையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப் பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதைத் தவிர்க்க முடியும். மேலும் ஒருங்கிணைந்த விதைப்புடன், ஒரே நேரத்தில் விதைப்பு செய்வதால் மக்காச்சோள படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது படைப்புழுவின் சேதார அளவுநடமாட்டம், பாதுகாப்பு நடவடிக்கையின் செலவு, மக்காச்சோள விலை ஆகியவற்றைக் கணக்கிட்டு பொருளாதார சேதநிலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் முடிவு செய்யப்பட்டு உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பரிந்துரை செய்யப்படுகிறது. மேற்படி பரிந்துரை செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான் உபயோகித்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மடத்துக்குளம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர