கொரோனா பரிசோதனை அதிகரிக்க உத்தரவு
கடையநல்லூரில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கூறினார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருவாய் பேரிடர் மீட்பு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், இணையதள வழியில் வழங்கப்படும் சான்றிதழ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடையநல்லூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் முக கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் செலுத்தி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
பொதுமக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முழுமையாக எடுத்து கொள்ள வேண்டும். கடையநல்லூரில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. நாள் ஒன்றுக்கு 100 மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதால் தற்போது 1,000 மாதிரிகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றாலத்தில் சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தாலும் கொரோனா விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.