கொரோனா பாதிப்பு: நடிகை மீனாவின் கணவர் மரணம்


கொரோனா பாதிப்பு: நடிகை மீனாவின் கணவர் மரணம்
x

நடிகை மீனாவின் கணவர் கொரோனா காரணமாக சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.

சென்னை,

சிவாஜி கணேசன் நடித்த 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா. 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் ரஜினிகாந்துடன் சிறுமியாக நடித்தார். 'என் ராசாவின் மனசிலே' படத்தில் கதாநாயகி ஆனார். 'எஜமான்', 'அவ்வை சண்முகி', 'முத்து', 'ராஜகுமாரன்', 'நாட்டாமை' உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.

தென்னிந்திய கதாநாயகிகளில் மிக முக்கியமான கதாநாயகியாகவும் மீனா திகழ்ந்தார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். நைனிகாவும் சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்யுடன் 'தெறி', அரவிந்த்சாமியுடன் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

மரணம் அடைந்தார்

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே இருந்தது. அதற்காக சிகிச்சை பெற்று அவர் குணமடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (புதன்கிழமை) நடக்கும் என்று தெரிகிறது.


Next Story