குமரியில் 2 மருத்துவ மாணவர்கள் உள்பட 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் 2 மருத்துவ மாணவர்கள் உள்பட 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 2 மருத்துவ மாணவர்கள் உள்பட 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவிட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் 26-ந்தேதி ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது சுமார் 700 பேருக்கு நடந்த கொரோனா பரிசோதனை முடிவில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவர்.
மேலும் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
வீட்டு தனிமையில் சிகிச்சை
குமரி மாவட்டத்தில் புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 20 பேர் முன்சிறை ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் அகஸ்தீஸ்வரம்-3, கிள்ளியூர்-5, குருந்தன்கோடு-7, நாகர்கோவில்-15, ராஜாக்கமங்கலம்-2, திருவட்டார்-4 மற்றும் தக்கலை-4 என மொத்தம் 60 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
---