தனியார் பல்கலைக்கழக விடுதியில் 118 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று


தனியார் பல்கலைக்கழக விடுதியில் 118 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று
x

தனியார் பல்கலைக்கழக விடுதியில் 118 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த மேலகோட்டையூரில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் 5,670 பேர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கின்றனர். கடந்த வாரம் வெளிமாநிலத்தில் இருந்து முதலாம் ஆண்டு சேர வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிேசாதனை மேற்கொள்ளப்பட்டதில் நேற்று முன்தினம் வரை 74 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று 44 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118- ஆக உள்ளது. இவர்களில் 30 மாணவர்கள், 88 மாணவிகள் ஆவர்.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்கலைக்கழக விடுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு போதுமான மருந்து, மாத்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேர் படிக்கும் கட்டமைப்பு கொண்ட இங்கு 11 ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர். இதில் முதலாம் ஆண்டு பயிலும் 5,670 மாணவர்கள் உள்பட யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம், இது குறித்து பயப்பட தேவையில்லை என்று கூறி உள்ளேன். விடுதியில் தங்கி இருந்த 1500-க்கும் அதிகமானோருக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.

குரங்கு அம்மை

அவர்களுக்கும் சோதனை மேள்கொள்ளப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது நெகட்டிவ் என வர ஆரம்பித்துள்ளது. இதனால் விரைவில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

குரங்கு அம்மை நோய் ஒரு புதிய வகையான நோய். அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியவில்லை. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தால் அவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ். எஸ் பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட மலேரியா அலுவலர் சாந்தி, திருப்போரூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன். உதவி திட்ட அலுவலர் பெருமாள். உலபட பலர் இருந்தனர்.

முன்னதாக ஒருநாள் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு பரிசோதனை செய்யும் இடங்களையும் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story