நாகர்கோவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று
நாகர்கோவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
நாடு முழுவதும் கடந்த 2021-ம் ஆண்டு வரை கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. ஆனாலும் இந்த பாதிப்பு முற்றிலும் நீங்க வில்லை. குமரி மாவட்டத்தில் கடந்த வாரத்துக்கு முன்பு வரை சிலர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டார். இதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா பரவலை தடுக்கவும் அதன் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கவும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.