கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகள் தயார்


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகள் தயார்
x

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

திருநெல்வேலி

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, மருந்துகள் இருப்பு, கொரோனா சிகிச்சையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அவருடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள் சென்றனர்.

இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:- உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 160 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 20 படுக்கைகள் ஐ.சி.யு.பிரிவுடனும், அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் இணைப்புடனும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 ஆக்சிஜன் பிளாண்டுகள் தயார் நிலையில் இருக்கிறது. அதே போல் 500-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story