13 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்
சிவகாசி வட்டாரத்தில் 13 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்.
சிவகாசி,
சிவகாசி வட்டாரத்தில் 13 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா
சிவகாசி பகுதியில் நேற்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. நகரில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கொரோனா பாதிப்பு குறித்து விளக்கினர். அப்போது அவர்கள் அனைவரும் முககவசம் அணிய வலியுறுத்தினர்.
சிவகாசி வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் 11 பேர் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவகாசியை சுற்றி உள்ள கிராமங்களில் வசித்து வரும் 20 பேர் கொரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 4 கர்ப்பிணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
13 இடங்களில் முகாம்
இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு இருந்தாலும், சிவகாசி பகுதியில் கொரோனா பாதிப்பு இல்லை. திருத்தங்கல் பகுதியில் வசிக்கும் 8 பேர் சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று திரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி வட்டாரத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி என 13 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.