வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோய் பகுப்பாய்வு கருவியை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் கூட்டரங்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
90 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி
குளச்சல் மற்றும் முட்டம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் என்னென்ன என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. குளச்சலில் பிரேத பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கட்டிடமும் கட்டப்படும். கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 99 லட்சம் செலவில் மருத்துவப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு கட்டிடம், ஓய்வறைகள் மற்றும் கூட்டரங்கு கட்டிடங்களும் மற்றும் ரூ.2.65 கோடியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்கும் வகையில் புதிய கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடங்களை வருகிற 29-ந் தேதி திருச்சியில் இருந்தபடி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மத்திய குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளார்கள். கொரோனா பாதிப்பு இருந்தபோது தடுப்பூசி போடும்படி தமிழக அரசால் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது முதல் கட்ட தடுப்பூசி 96 சதவீத மக்களுக்கும், 2-வது கட்ட தடுப்பூசி 92 சதவீத மக்களுக்கும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
இன்று முதல் பரிசோதனை
நாகர்கோவிலில் ரூ.2.5 கோடியில் 10 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.13 லட்சத்தில் புதிய டயாலிசிஸ் எந்திரங்கள் வர இருக்கிறது.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் மூலம் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் தொற்று பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இந்த ரேண்டம் முறை பரிசோதனையை நாளை (அதாவது இன்று) சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்கிறேன். பொது இடங்களில் செல்லும் மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.