கொரோனா தடுப்பூசி, பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார்:முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்;முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா தடுப்பூசி, பெண் கல்வி உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தார். அவர் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா தடுப்பூசி, பெண் கல்வி உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தார். அவர் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
பொதுக்கூட்டம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்கும் பொதுக்கூட்டம் ஈரோடு திருநகர்காலனி தபால் அலுவலகம் பகுதியில் நடந்தது.
கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், எஸ்.மாங்குடி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, ஈ.பி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் பொ.ராமு என்கிற ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன், தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பேசினார்கள்.இந்த கூட்டத்தில் மத்திய முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பேசினார்.
நச்சுப்பாம்பு
அப்போது அவர் கூறியதாவது:-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
பா.ஜனதாவை எதிர்த்து அ.தி.மு.க.வால் பேச முடியுமா. அவர்கள் பேச மாட்டார்கள். இன்று அல்ல, 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட பேச மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நினைத்திருப்பார் நான் பரமசிவன் கழுத்து பாம்பு என்று. உண்மையில் இவர் கழுத்தில்தான் ஒரு நச்சுப்பாம்பு சுற்றி இருக்கிறது. அதைத்தான் நாங்கள் அவரிடம் சொல்கிறோம்.
மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பெருந்தொற்று கடுமையாக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வின் நடவடிக்கையும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீங்கள் அறிவீர்கள். கொரோனா உதவித்தொகை ரூ.4 ஆயிரம், மகளிர் குழுக்களுக்கு நிதி என்று கொேரானா தடுப்பூசி, கல்வி ஆகியவற்றுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து உள்ளது.
மிக விரைவில் உங்கள் மனதில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை உள்பட தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். எனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. கூறினார்.
திருநாவுக்கரசர்
அவரை தொடர்ந்து அதே கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு தலைவர் ரங்கராஜன் மோகன்குமாரமங்கலம், திருப்பூர் மேயர் தினேஷ்குமார், தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், கவுன்சிலர் ஜெயந்தி, வார்டு செயலாளர் பாலன், காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம், துணைத்தலைவர் விஜயபாஸ்கர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.