கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்கொரோனா தொற்று தடுப்பு ஒத்திகை
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று தடுப்பு ஒத்திகை நடந்தது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பி.எப்.7 ரக கொரோனா இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டது. குஜராத், ஒடிசாவிலும் இந்த வகை தொற்று தாக்கியதை கண்டறியப்பட்டது. இருப்பினும் இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கொரோனாவால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
தொற்று தடுப்பு ஒத்திகை
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று அரசு ஆஸ்பத்திரிகளிலும் நோய் தடுப்பு ஒத்திகை நடந்தது. அதேபோல் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் 108 ஆம்புலன்சு மூலம் வந்த கொரோனா நோயாளிகளை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து இறக்கி, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் ஒத்திகையை நடத்தினர்.இந்த அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளர் பகுப்பாய்வு மையம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, ஆக்சிஜன் படுக்கைகள், செயற்கை சுவாச கருவிகள் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் செலுத்தும் கருவிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
தற்காப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கிருமி நாசினிகள் ஆகியவையும் தேவையான அளவு உள்ளது. 75 தனிமைப்படுத்த படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமரன், டாக்டர் பிரேமா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் செய்திருந்தார்.