பஸ் நிலைய கடைகளுக்கான வைப்பு தொகையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


பஸ் நிலைய கடைகளுக்கான வைப்பு தொகையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான வைப்புத்தொகையை மாநகராட்சி நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான வைப்புத்தொகையை மாநகராட்சி நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளது.

வைப்புத்தொகை உயர்வு

சிவகாசி பஸ்நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப் பட்ட 8 கடைகள் இன்னும் ஏலம் போகாமல் இருக்கிறது. இதற்கு வைப்புத்தொகை உயர்வு தான் காரணம். இதனை குறைத்தால் மாநகராட்சிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும் என்று 'தினத்தந்தி'யில் கடந்த 29-ந் தேதி செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் சம்பந்தப்பட்ட கடைகளை நேரில் ஆய்வு செய்து கடைகளை ஏலம் விட தேவையான நடவடிக்கையை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் தற்போது முன்வைப்பு தொகையாக உள்ள ரூ.6 லட்சத்தை, ரூ.4 லட்சமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிவகாசி மாநகராட்சியின் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சிவன்கோவில் அருகில் உள்ள வணிக வளாகம், காமராஜர் ரோட்டில் உள்ள வணிக வளாகம், அரசன் தங்கவிழா வணிக வளாகம், மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் என ஏலம் போகாத கடைகளுக்கும் முன்வைப்பு தொகையை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஸ் நிலையம்

திருத்தங்கல் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம் தற்போது வரை செயல்பாட்டுக்கு வராமல் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற அதிகாரிகள் அந்த பஸ் நிலையத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Next Story