மாநகராட்சி துப்புரவு பணியாளர் வெட்டிக்கொலை


மாநகராட்சி துப்புரவு பணியாளர் வெட்டிக்கொலை
x

மாநகராட்சி துப்புரவு பணியாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

துப்புரவு பணியாளர்

திருச்சியை அடுத்த கொட்டப்பட்டு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 60). இவர் மாநகராட்சி 39-வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி சுசிலா, துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் இவர் தனது மகன் மற்றும் மகளுடன் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் வசித்து வருகிறார்.

வருகிற அக்டோபர் மாதம் கலியபெருமாள் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருடைய ஓய்வூதிய பணப்பலன்கள் மூலம் கிைடக்கும் பணத்தை தங்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று சுசிலா, அவருடைய மகன் குமார்(38) ஆகியோர் கலியபெருமாளிடம் கேட்டு அடிக்கடி பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, கலியபெருமாள் தனது இரண்டாவது மனைவி பாப்பம்மாளுடன் கொட்டப்பட்டு ஜே.ஜே. நகரில் வசித்து வந்தார்.

வெட்டிக்கொலை

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக பொன்மலை போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் கலிய பெருமாள் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ெமாபட்டை வழிமறித்த 2 பேர், கலியபெருமாளை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஓய்வூதிய பணப்பலன்கள் மூலம் கிடைக்கும் பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கலியபெருமாளை அவரது மகன் குமார், அவரது உறவினரான தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி காலனி உக்கடை ரோடு பகுதியை சேர்ந்த பாண்டியன்(25) ஆகியோர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story