ஈரோடு மாநகராட்சியில் பாதாளசாக்கடை -ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை


ஈரோடு மாநகராட்சியில் பாதாளசாக்கடை -ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை
x

ஈரோடு மாநகராட்சியில் பாதாளசாக்கடை- ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் பாதாளசாக்கடை- ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம்

ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஆணையாளர் சிவக்குமார், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, சசிக்குமார், குறிஞ்சி தண்டபாணி, கவுன்சிலர்கள் கோகிலவாணி மணிராசு, கவுசல்யா, கா.ஜெகதீஸ், ச.தமிழ்ப்பிரியன், மோகன்குமார், வனிதாமணி, ஜெயமணி, வக்கீல் ரமேஷ்குமார், எஸ்.நந்தகோபு, தண்டபாணி ஆகியோர் பேசினார்கள்.

பாதிப்பு

அவர்கள் பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகளுக்காக நீண்ட காலமாக வேலை நடந்து வருகிறது. இதில் எந்த பணியும் முறையாக செய்யப்படவில்லை. இந்த பணிகளுக்காக அடிக்கடி சாலைகள் உடைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்கள் சீரமைப்பு பணிகளை செய்வது இல்லை. சாலையை உடைத்து மண்ணை எடுக்கிறவர்கள் மீண்டும் சாலையை செப்பனிட வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்கிறார்கள். குடிநீர் குழாய்கள், சாக்கடை குழாய்கள் என்று ஒவ்வொருவரும் ஏதேனும் உடைத்துப்போட்டு விட்டு சீரமைப்பு பணிகள் செய்யாமல் இருப்பதால், கவுன்சிலர்களாகிய நாங்கள் மக்கள் மத்தியில் நடமாட முடியாத நிலை உள்ளது.

முடிக்க வேண்டும்

தேர்தலுக்கு முன்பு சாலைகள் போடப்பட்டன. எந்த பணியையும் முடிக்காமல் சாலைகள் போடப்பட்டது. பின்னர் இப்போது மீண்டும் திட்டப்பணிகளுக்காக தோண்டுகிறார்கள். இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒப்பந்ததாரர்களின் நடவடிக்கையால் அரசுக்கும், மாநகராட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஏதேனும் ஒரு பகுதியில் பிரச்சினை என்று சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்தால், அவர்கள் யாரும் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பது இல்லை. எந்த வேலையும் நிறைவேற்றி தருவது இல்லை. எனவே ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் மிகக்குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்துக்கொண்டு மெதுவாக பணிகளை செய்கிறார்கள். ஆனால், கவுன்சிலர்கள் மக்களை சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறார்கள். பாதாள சாக்கடை, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள் முடிந்தால்தான் ரோடு போட முடியும். ஆனால், இப்போது அந்த பணிகள் செல்லும் வேகத்தை பார்த்தால் 5 ஆண்டுகள் ஆனாலும் முடிக்க மாட்டார்கள். இதற்கிடையே சாலைகளை புதிதாக போட முடியவில்லை என்றாலும் செப்பனிட்டு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள்

மழையின் போது வீடுகளுக்குள் சாக்கடை வெள்ளம் போகிறது என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், கண்டுகொள்ளாத நிலை இருக்கிறது. குப்பைகள் சேகரிப்பவர்கள் சரியாக வேலை செய்யாததால், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். எனவே இதுபற்றி கண்காணிக்க வேண்டும். ஞானபுரம் பகுதியில் சமூக நலக்கூடம் கட்டித்தர கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஒப்புதல் அளித்து உள்ளார். ஆனால், கட்டிட வரவு, செலவு அறிக்கை இன்னும் மாநகராட்சி அதிகாரிகளால் வழங்கப்படவில்லை. பல இடங்களில் தெரு விளக்குகள் ஒளிரவில்லை. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து வார்டுகளுக்கும் கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி பேசும்போது, மாநகராட்சி கூட்ட அரங்கில் தந்தை பெரியார் உருவப்படம் வைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் கோகிலவாணி மணிராசு உள்பட பலரும் இதனை ஆமோதித்தனர்.

கூட்டத்தில், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன், மாநகராட்சி பொறியாளர் ஆ.மதுரம், உதவி ஆணையாளர் சண்முகவடிவு, மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் தங்கராஜ், உதவி செயற்பொறியாளர் எட்வின் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story