மாநகராட்சி அலுவலகத்தை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முற்றுகை
மாநில அரசின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, மாநகராட்சி அலுவலகத்தை கேபிள் டி.பி. ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டனர்.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முற்றுகை
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு வயர்களை கொண்டு செல்வதற்கு தளவாடகை கட்டணம் செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திரண்டு வந்தனர்.
மேலும் மாநில அரசு விதித்த கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தாலுகா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் செயலாளர் முத்து, பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், துணை தலைவர் மகேந்திரன் மற்றும் ஆபரேட்டர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ரத்து செய்யக்கோரி...
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், கேபிள் டி.வி. இணைப்புக்கு நாங்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்தி வருகிறோம். ஆனால் மாநில அரசு கேபிள் டி.வி. இணைப்புக்கு ஒரு கி.மீ. தூரம் வயரை கொண்டு செல்ல ஆண்டுக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்தும்படி கூறுகிறது. ஆனால் மத்திய அரசு ஒரு முறை கட்டணமாக ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.1,000 செலுத்தினாலும் போதும் என்று கூறுகிறது.
இதற்கிடையே மாநில அரசின் கட்டணத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. கட்டணத்தை செலுத்த தவறினால் கேபிள் டி.வி. வயர்களை துண்டித்து விடுவதாக கூறுகின்றனர். எனவே மாநில அரசின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர்.
இதற்கிடையே வடக்கு ரதவீதி பகுதியில் கட்டணம் செலுத்தாததால், கேபிள் டி.வி. வயரை மாநகராட்சி ஊழியர்கள் துண்டிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.