பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளரை கவுரவித்த மாநகராட்சி அதிகாரிகள்
முத்தையாபுரத்தில் பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளரை மாநகராட்சி அதிகாரிகள் கவுரவித்தனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் கொடிவேல். இவர் முத்தையாபுரம் கிராம பஞ்சாயத்தாக இருந்தபோது தூய்மை பணியாளராக பணிக்கு சேர்ந்தார். இதன்பின்னர் 2007-ம் ஆண்டு முத்தையாபுரம் பஞ்சாயத்து தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோது மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.
தற்போது கொடிவேல்க்கு 60 வயது ஆனதால் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைதொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு மாலை அனுவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவரை மாநகராட்சி அதிகாரியின் வாகனத்தில் அதிகாரியின் இருக்கையில் அமரவைக்கப்பட்டு முத்தையாபுரம் கீழத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், தூய்மை காவலர்கள் செல்வக்குமார், நல்லகுமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் பன்னீர், சாமிநட்டார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.