தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 15 கடைகளை பூட்டிய மாநகராட்சி அதிகாரிகள்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 15 கடைகளை பூட்டிய மாநகராட்சி அதிகாரிகள்
மாத வாடகை செலுத்தாததால் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 15 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர். இதனால் வியாபாரிகள் சாலை மறியலுக்கு முயன்றனர்.
பழைய பஸ் நிலையம்
தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் 13 ஆயிரத்து 469 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட பழைய பஸ் நிலையம் ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு ரூ.15 கோடியே 49 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு 49 கடைகள் உள்ளன.
இந்த பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது. மாத வாடகையாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.82 ஆயிரம் வரை ஏலம் எடுக்கப்பட்டு, வியாபாரிகள் கடைகளை நடத்தி வந்தனர்.
பூட்டப்பட்ட கடைகள்
இந்தநிலையில் கடையின் வாடகை அதிகம் என்பதாலும், அந்த அளவுக்கு வியாபாரம் நடைபெறாத காரணத்தினாலும் பல வியாபாரிகளால் வாடகையை முறையாக செலுத்த முடியவில்லை. கடந்த 3, 4 மாதங்களாக வாடகை செலுத்தாத சுமார் 15 கடைகளை மாநகராட்சி வருவாய்த்துறையினர் நேற்றுகாலை பூட்டினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சக வியாபாரிகளும் கடைகளின் கதவுகளை பாதிஅளவு பூட்டிவிட்டு வியாபாரத்தை புறக்கணித்தனர். மேலும் வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர். இதை அறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அப்போது கடைகளின் வாடகை அதிகமாக இருப்பதால் தங்களால் செலுத்த முடியவில்லை. கடைகளின் வாடகையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் கடைகளை ஒப்படைக்கிறோம். எங்களது பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதைகேட்ட போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு வியாபாரிகளை அழைத்தார்.
ஆனால் பூட்டப்பட்ட கடைகளை திறக்க வேண்டும். கடைகளை பூட்டியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சாவிகளை பெற்று கடைகளை திறந்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம். இல்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் திறப்பு
சாலை மறியலில் எவ்வளவு பேர் ஈடுபட்டாலும் சட்டப்படி அவர்கள் அனைவரையும் கைது செய்வோம். பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு விவரங்களை கூறியதுடன் கடைகளை திறக்கும்படி வலியுறுத்தினர். இதையடுத்து பூட்டப்பட்ட 15 கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, மாநகராட்சி அதிகாரிகள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றனர். கடைகளின் மாத வாடகை அதிகமாக இருக்கிறது. எங்களால் மாத வாடகையை செலுத்த முடியவில்லை. வாடகையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
மேலும் பழைய பஸ் நிலையத்திற்குள் தரைக்கடைகள் போட்டு, நாங்கள் விற்கக்கூடிய அனைத்து பொருட்களையும் அவர்களும் விற்பதால் எங்களுக்கு வியாபாரம் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தரைக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கிறோம். சிலர் கடைகளை ஒப்படைக்க இருக்கிறார்கள்.
டெபாசிட் மட்டுமின்றி 12 மாத வாடகை தொகையையும் அதிகாரிகள் எங்களிடம் பெற்றுள்ளனர். அந்த 12 மாத வாடகை தொகையில் எங்களால் எத்தனை மாதங்கள் வாடகை செலுத்தவில்லையோ அந்த தொகையை பிடித்தம் செய்துவிட்டு மீதி தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்றனர்.