மாநகராட்சி பூங்கா சுத்தம் செய்யும் பணி; கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்


மாநகராட்சி பூங்கா சுத்தம் செய்யும் பணி; கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
x

தூத்துக்குடி பிரையண்ட்நகரில் மாநகராட்சி பூங்காவை சுத்தம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரையண்ட்நகரில் மாநகராட்சி பூங்காவை சுத்தம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

பூங்கா சுத்தப்படுத்தும் பணி

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா பயன்பாடின்றி கிடந்தது. இதனால் பூங்கா முழுவதும் முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது. இந்த பூங்கா பகுதியில் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இந்த பூங்காவை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகனிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் பூங்காவை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

உறுதிமொழி

முன்னதாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்ட மாட்டோம், மற்றவர்களையும் குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் அருண்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story