ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை சார்பில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டம், கொடைரோடு சுங்கச்சாவடியில் நேற்று நடைபெற்றது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை சார்பில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டம், கொடைரோடு சுங்கச்சாவடியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய மதுரை மண்டல அலுவலர் அஜய் பிஷ்னோய் தலைமை தாங்கினார். ஊழல் கண்காணிப்பு துறை பொது மேலாளர் சஞ்சீங் சர்மா முன்னிலை வகித்தார். துணை மேலாளர் ஓம்பிரகாஷ் சர்மா, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மதுரை திட்ட இயக்குனர் நாகராஜ், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அதிகாரிகள் பேசும்போது, ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் தொடர்பாக தகவல் கொடுப்பது குறித்த கருத்துகளை தெரிவித்தனர். மேலும் மத்திய அரசு நிறுவனங்களில் ஊழலை தடுக்க மத்திய அமைச்சகம் மூலம் நடடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அதுகுறித்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
பின்னர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் பேசினார். அப்போது அவர், "நாகையகவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் கொழிஞ்சிபட்டி முதல் ஜல்லிபட்டி வரை அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி கொழிஞ்சிபட்டி முதல் ஜல்லிபட்டி வரை இணைப்பு சாலை அமைக்க வேண்டும்" என்றார். மேலும் இதுதொடர்பாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் அவர் மனு கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த கூட்டத்தில் கொடைரோடு சுங்கச்சாவடி திட்ட மேலாளர் வசந்தராவ், வருவாய் மேலாளர் சஞ்சய் மொகந்தி, பேரூராட்சி கவுன்சிலர் மேரி ஸ்டாலின், பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.